
கரும்பு விழாக் கரையோரம்...
பொங்கல்...பூக்களை மட்டுமே
பூஜிக்கும் பூமியில்
வேர்களுக்குக்
கிளைகள் எடுக்கும்
கலை விழா.
மோதிரங்களின் தாலாட்டில்
விரல்களை
மறந்து விட்டவர்களுக்கு
பாதங்கள் நடத்தும்
பாராட்டு விழா.
தனக்குத் தானியம் தந்த
வயல்களுக்கு
வரப்புகள் விரிக்கும்
வாழ்த்து விழா.
பணப்பை கள் பார்க்கத் தவறிய
கலப்பைகளுக்கு,
கிராமச் சாலைகள் நடத்தும்
கோலாகல விழா.
நாடுகள்
கிரீடப் போட்டிக்கு
கவசங்களோடு அலைய,
இங்கே
மாடுகளின் தலையில்
முடிசூட்டு விழா நடக்கும்.
தங்கத் தட்டுகளை வெறுத்து
செங்கல் மீதில்
திங்களைப் பார்த்து
பொங்கல் பானை
பொங்கிச் சிரிக்கும்.
நம்பிக்கைகளை நன்றாகிய
பச்சைக்கு
கும்மிக்கைகள் ஒன்றாகி
குதுகெலமாய் நன்றி சொல்லும்.
நல்ல நிலத்தில்
விதை விழுந்தால்,
ஆயிரம் விதைகள் பயிராகும்
என
களஞ்சியங்கள் ஒப்புக்கொண்டு
கையெழுத்திடும்.
வாருங்கள்,
அனுபவக் கலப்பைகள்
உழுது முடித்த உள்ளத்துள்
நல்லெண்ண விதைகளை
ஆழமாய் ஊன்றுவோம்.
இன்னோர் பொங்கலுக்காய்
இதயம் தயாரிப்போம்


சிந்தையில் தை.
இதோ தை மாதக் குதிரையில் வருகிறது திருவிழா. வாசல்களே, உங்கள் குப்பைகளைக் கழித்து கோலத்தின் முத்ததுக்காய் குளித்துக் காத்திருங்கள். சுவர்களே உங்கள் அழுக்கு ஆடைகளை சுண்ணாம்பு வேட்டிகளால், சுற்றி மறையுங்கள். கொட்டில் மாடுகளே வாருங்கள், உங்கள் தொட்டில் முற்றத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. புதிய பானைகளே பொறுத்திருங்கள், உங்கள் உள்ளம் பொங்கி வழிய இதோ நாள்காட்டிகளும் பட படக்கின்றன. வயல்காற்றே வாருங்கள் எங்கள் வியர்வையின் ஈரத்தை உணவின் சாரமாக மாற்றியது நீங்கள் தான். திண்ணையில் வந்தமருங்கள். பூமித் தாயே பெருமிதம் கொள், நீ உமிக்குள் ஒளித்து வைப்பதை இன்னும் எங்கள் கணிணிக் கூடங்களால் தயாரிக்க இயலவில்லை. எல்லோரும் வாருங்கள், மனம் பொங்க மகிழுங்கள் இது தமிழர் கலாச்சாரத்தின் தனி அடையாளம். அறுவடையின் ஆனந்தத்திலும், வறுமையின் வேதனையிலும், நன்றி மறக்காத என் தமிழ்த் தலைமுறையின் தன்மான அடையாளம். கலாச்சார வேர்களை ஆழ உழுது வை. வயலில்லையேல் செயலில்லை என்பதை சிந்தையில் தை. இதோ வந்து விட்டது தை.

பொங்கல் வாழ்த்துக்கள்:
மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது
கரும்பைக் கைபிடிக்க
கட்டழகைக் கண்பிடிக்க
குறும்பைச் சொல்பிடிக்க
குமரியிதழ் தேன்வடிக்க
வயலில் வாய்க்காலில்
ஒய்யார நடைநடந்து
பயலும் பொண்ணுகளும்
பாடிவரும் பொங்கலிது
வீட்டுப் பசுமாடும்
வயலேறும் எருதுகளும்
பாட்டுச் சலங்கைகட்டி
பொன்னழகுப் பொட்டுவச்சி
தோட்டத் தெருவெல்லாம்
தொலைதூர வெளியெல்லாம்
ஆட்டம் போட்டுவரும்
அழகுமணிப் பொங்கலிது
மண்ணைக் கையெடுக்க
மனசெல்லாம் மூச்செறிய
பொன்னை அள்ளியதாய்ப்
பெருமிதத்தில் கண்விரிய
அன்னம் கொடுப்பவளின்
அருமைகளை எண்ணிமனம்
நன்றிப் பெருக்கோடு
நிலம்வணங்கும் பொங்கலிது
பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கலோ பொங்கல்

எங்கள் ஊர் பொங்கல்
ஞாபக இழைகளைச் சிக்கெடுத்து
எங்களூர்ப் பொங்கலை
ஓர் நினைவுச் சடையாய்ப்
பின்னிப் பார்க்கிறேன்
அன்பைப் பெருக்கி கண்களில் சுருக்கி
ஆழ உயிர்க் குரலில்
'அம்மா' வென்ற கதறலோடு
சாம்பல்நிறப் பசுமாடு
திண்ணை மெழுகிப்போட
சாணம் இட்டு நிற்கும்
சுவரோர நிழலில்
எத்தனையோ முறை
கீறிக்கீறிக் காயப்படுத்தினாலும்
கொத்திக்கொத்திப் புண்ணாக்கினாலும்
அத்தனை முறையும்
சிரிக்கும் அன்புத் தாயாய்
அமுதள்ளி ஊட்டும் நிலம்
சோற்றுத் தட்டின்
ஓரங்களாய் ஈரம் மிளிர
நனைந்து கிடக்கும் வரப்புகளில்
நடப்பேன் நாளெல்லாம்
கால்கள் நொந்ததில்லை
வேண்டும் என்று எண்ணி
வானம் பார்க்கும் போதெல்லாம்
என் வேண்டுகோளுக்காகவே
காத்திருக்கும் மழைத்தேவதை
நெஞ்சு நெகிழ வீழ்வாள்
மண்வாசம் சுகமாக எழும்ப
வேட்டுச் சத்தம் கேட்டதோடு
வீரிட்டு ஓடும்
மாட்டுவண்டிக் கொண்டாட்டத்தை
விழிகளில் அச்சம் கிடுகிடுக்க
பதுங்கி நின்று வேடிக்கை பார்த்த
அந்தப் பழைய நாட்கள்
முகத்தை
வெட்டிவெட்டி நடக்கும்
குங்குமப் பொட்டுக் குமரிகள்
வட்டவட்டமாய் வந்து கும்மியிட்டு
'குடுடா காசு' என்று மதுச்சிரிப்போடு
மல்லுக்கு நிற்கும்போது
பருவ நெருப்புச் சிறகுகள் விரித்த
கல்வெட்டுப் பொற்பொழுதுகள்
இன்றெல்லாம்
நகர மறுக்கும் நகர வாழ்க்கை
தினந்தோறும்
நீள அகளத்தில் அறிவைக் கிழிப்பதும்
தையல் போடவும் வழியற்றுப்
பிதுங்குவதுமாய் நாட்கள்
என் கண்களில் பொங்குது பொங்கல்........


No comments:
Post a Comment